தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சார்பில், மின்கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக, பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மின்சாரம் என்பது தவிர்க்க முடியாத அடிப்படை தேவையாகிவிட்டது. தமிழக மின்வாரியத்திற்கு கடந்த நிதியாண்டில் 40,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் நிதி இழப்பு ரூ.52,000 கோடி வரை உயரும். மின்வாரியத்தை நம்பி இனி எவரும் கடன் கொடுக்கத் தயாரில்லை என்று வெளிப்படையாகவே மின்வாரிய அதிகாரிகள் நிலைமையைத் தெளிவுபடுத்துகின்றனர்.வருடந்தோறும் சுமார் 8 சதவிகிதம் மின் பயன்பாடு அதிகரித்து கொண்டே செல்கிறது. தொழில் வளர்ச்சி, விவசாய வளர்ச்சி, மக்கள்தொகை பெருக்கம், பொதுமக்களின் வாழ்க்கை தரம் உயருதல், குளிர்சாதனங்கள் உள்ளிட்ட மின்உபகரணங்களின் பயன்பாடு அதிகரித்தல் ஆகியவை இதற்கு காரணமாகக் கூறப்படுகின்றன. பெருகி வரும் மின்தேவைக்கு ஈடாக புதிய மின்உற்பத்தி திட்டங்கள் எதுவும் 1996ஆம் ஆண்டிற்குப் பிறகு செயல்படுத்தப்படவில்லை. தமிழகத்திற்கு தினமும் 11,500 மெகாவாட் மின்சாரம் தேவை. ஆனால், 9,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே நம்மிடம் உள்ளது. அதாவது, மின் பற்றாக்குறை மாநிலமாக தமிழகம் உள்ளது. நமது மின்தேவைக்காக தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட் ரூ.19-க்கு விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் நாம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ.2.25 மட்டுமே. மத்திய தொகுப்பிலிருந்து நமது முதல்வர் கோரிய அளவிற்கு நமக்கு மின்சாரம் மத்திய அரசால் வழங்கப்படுவது இல்லை.இதனால், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் வாங்குவதால், அந்த தனியார் நிறுவனங்கள் கொழுத்த லாபம் அடைகின்றன. மின்வாரியத்தின் மொத்த வருமானத்தில் 86 சதவிகிதம் தனியாரிடம் மின்சாரம் வாங்கவே செலவிடப்படுகிறது. மின்உற்பத்திக்குப் போதிய திட்டமிடாததுதான் இதற்கு அடிப்படைக் காரணம்.மேலும், அனல் மின் நிலையங்களில் மின்உற்பத்திக்கான நிலக்கரியின் விலை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உயர்ந்து கொண்டே செல்கிறது. பிற மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் நிலக்கரியை ரயில் மற்றும் கப்பல்களில் கொண்டு வரும் செலவும் அதிகரித்துள்ளது.உள்நாட்டில் 70 சதவிகிதம் நிலக்கரி மட்டுமே உள்ளது. வெளிநாடுகளிலிருந்து 30 சதவிகித நிலக்கரி இறக்குமதி செய்கிறோம். இதன் காரணமாக ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. நம் வசம் உள்ள அனல் மற்றும் புனல் (நீர்) மின்நிலையங்கள் மிக பழைமையானவை. எனவே, பழுது மற்றும் பராமரிப்பு செலவுகள் பன்மடங்கு உயர்ந்துள்ளன. விவசாயிகளுக்கு மின்வாரியத்தால் வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு தமிழக அரசு வழங்க வேண்டிய மானியத்தொகை ரூ.10,000ம் கோடிக்குப் பதில், வெறும் 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மின்வாரியம் ஆள்பற்றாக்குறை, போதிய நிதியின்மை ஆகியவற்றால் திவால் ஆகும் சூழ்நிலை உள்ளது. எனவே, மின்கட்டணத்தை உயர்த்தியே ஆக வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளதாக மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்றுக் கொண்ட உடனேயே, "வரும் 2012-13 ஆண்டிற்குள் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றுவேன். அதாவது மின்உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு அடைவதோடு தேவைக்கு அதிகமாகவே மின் உற்பத்தி செய்யப்படும்' என்று உறுதி கூறியுள்ளார். அவரது கூற்றுப்படி, வரும் ஆண்டில் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின்சாரமும், வடசென்னையில் 1600 மெகாவாட் மின்சாரமும் பயன்பாட்டிற்கு வரும். கூடங்குளம் அணுமின்நிலையத்திலும் மின்உற்பத்தி துவங்கினால் நமக்கு மத்திய தொகுப்பிலிருந்து 963 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்கின்றனர். 2006ஆம் ஆண்டு வரை மின்தேவை மற்றும் மின்உற்பத்தி ஆகிய இரண்டும் சமமாகவே இருந்தது. தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே புதிய மின்உற்பத்தி திட்டங்கள் குறித்து சிந்தித்து செயல்படவில்லை. தொழில் வளர்ச்சி எனும் பெயரில் பன்னாட்டு நிறுவனங்களின் கார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் உட்பட பெரும் மூலதனங்களையும், மின்பயன்பாட்டையும் கொண்ட இதர தொழிற்கூடங்களையும் அமைப்பதிலேயே அதிக கவனம் கொடுத்து வருகின்றனர். புதிய சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்கி, அவற்றில் தொழில் துவங்குவோர்க்கு கேட்ட உடன் மின்இணைப்பு மற்றும் தடையற்ற மின்சாரம் ஆகிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. தேர்தல் ஆதாயத்திற்காக இலவச வண்ணத்தொலைக்காட்சி, மிக்ஸி, ஃபேன், கிரைண்டர் ஆகியவை வழங்கப்பட்டன. இப்படிப் பெருகி வரும் மின்தேவைக்கு ஏற்ப மின்உற்பத்தி திட்டங்கள் வகுக்கப்படவில்லை. கடந்த தி.மு.க. ஆட்சி வீழ்த்தப்பட்டதற்கு பல காரணங்களில் மின்வெட்டு மற்றும் மின்தடை ஆகியவையும் முக்கியமான காரணம். தி.மு.க. ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி பகிரங்கமாக இதை ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்தது போலவே தற்போதும் மின்வெட்டும், மின்தடையும் தொடர்கிறது. மக்கள் அதிருப்தி குரலை ஒலிக்கத் துவங்கியுள்ளனர். மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்று தெரியவில்லை. சென்னையில் சுமார் 2 மணி நேரமும், சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற பகுதிகளில் 4 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரையும் மின் தடை ஏற்படுகிறது. தமிழகத்தில் பல இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. இதன் காரணமாக விவசாயம், ஜவுளி, சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. சுமார் ஆறாயிரம் தொழிற்சாலைகள் மின்பற்றாக்குறை காரணமாக ஏற்கெனவே மூடப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகளுக்குக் கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புகள் வெளிமாநிலங்கள், அல்லது வெளிநாட்டிற்கேகூடச் சென்றுவிடுகின்றன. கோவை, திருப்பூர், சிவகாசி, கரூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட தொழில் நகரங்களில் உள்ள தொழிலமைப்புகள் மின்வெட்டை கண்டித்தும், புதிய மின்உற்பத்தித் திட்டங்களைத் துவக்கக் கோரியும் ஜனநாயக அறப்போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடத் துவங்கியுள்ளன. பொதுவாக தொழிலாளர்கள் மட்டுமே தங்கள் கோரிக்கைகளுக்காக வேலை நிறுத்தம் செய்து வந்த இப்பகுதிகளில் தற்போது முதலாளிகளும் வேலை நிறுத்தப் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடத் துவங்கியுள்ளனர் என்பதை நாம் கவனிக்கத் தவறக்கூடாது. கோவையில் தொழிலமைப்புகள் சார்பில் நடத்தத் திட்டமிட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம் காவல்துறை அனுமதி மறுப்பின் காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்வெட்டால் பாதிப்புக்குள்ளாகியுள்ள விவசாயம் மற்றும் தொழிலமைப்பைச் சார்ந்தவர்கள் தமிழக அரசின் மீது கடும் அதிருப்தி அடைந்தனர். புதிய மின்உற்பத்தி திட்டங்கள் பயன்பாட்டிற்கு வரும் வரை மின்வெட்டு தவிர்க்க முடியாதது. இதை ஒழுங்குபடுத்த வேண்டும். மின்வெட்டு நேரங்கள் முன்கூட்டியே அறிவிக்கப்பட வேண்டும். அறிவிக்கப்படாத மின்வெட்டு அனைத்து தரப்பினருக்கும் நஷ்டத்தையும், துன்பத்தையும் ஏற்படுத்துகிறது. திடீர் திடீரென மின்சாரம் போவதும், வருவதுமாக இருப்பதால் மின் உபகரணங்கள் பழுதடைகின்றன. தொழிற்சாலைகளில் உள்ள இயந்திரங்களும், கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களும் பழுதடைகின்றன. தமிழக மின்வாரியம் மற்றும் அதன் துணை நிறுவனங்களான மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றில் தமிழக முதல்வர் நேரடி கவனம் செலுத்த வேண்டும். நல்ல திறமையும் நேர்மையும் கொண்ட அதிகாரிகளை நியமிக்க வேண்டும். மின்வாரியத்தில் நிலவும் ஆள்பற்றாக்குறையைப் போக்க வேண்டும். வாரியத்தில் நிலவும் ஊழல் நடவடிக்கைகள் கண்டறியப்பட்டு அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இலவச மின்சாரத்திற்காக தமிழக அரசால் வழங்கப்பட வேண்டிய மானியத்தொகை ரூ.10,000 கோடியை மின்வாரியத்திற்கு வழங்கிட வேண்டும். தொழிற்சாலைகளுக்குத் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும். வாரம் ஒருமுறை மின்விடுமுறை கொடுத்து மின்வெட்டை நடைமுறைப்படுத்தலாம் என்கிற கருத்தைப் பரிசீலிக்க வேண்டும். மின்விநியோகத்தில் ஏற்படும் மின்இழப்பு தமிழகத்தில் 18 முதல் 20 சதவிகிதம் வரை உள்ளது. மின் உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து மின்பயன்பாட்டு இடத்திற்கு கம்பிகள் வழியாக மின்சாரம் செல்லும்போது மின் இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. 20 சதவீதம் மின் இழப்பு என்பது 900 மெகாவாட் மின் சக்தி ஆகும். இதன் மதிப்பு ரூ.6,000 கோடி. அதாவது, கூடங்குளத்தில் அணுமின் உற்பத்தி துவங்கினால் நமக்கு மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்கும் மின்சார அளவிற்கு இது சமமாகும். தமிழகத்தில் மின் திருட்டு 2 சதவிகிதம் உள்ளதாகவும் கூறுகின்றனர். பொதுவாக அதிகாரிகளுக்குத் தெரிந்துதான் மின்திருட்டு நடக்கிறது என்கிற குற்றச்சாட்டு உள்ளது. மின் திருட்டை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் இழப்பைக் குறைக்க மேலை நாடுகளில் மேற்கொள்ளும் விஞ்ஞானபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஐந்து சதவிகிதம் வரை மின்இழப்பைக் குறைத்தாலே நமக்கு ஏராளமான மின்சாரம் கிடைக்கும். தமிழகத்தில் நெய்வேலி, கல்பாக்கம் உள்ளிட்ட மின்உற்பத்தி நிலையங்களில் தயாரிக்கப்படும் மின்சாரம் மத்திய தொகுப்பிற்கு சென்று அதன் பின் தமிழகத்திற்கு குறிப்பிட்ட அளவு பகிர்ந்தளிக்கப்படுகிறது. தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்குக் கொடுக்கப்படும் மின்சாரம் செல்வதற்கு மட்டும் போதிய மின் தட வசதிகள் உண்டு. கிழக்கு மாநிலங்கள் மற்றும் குஜராத் உள்ளிட்ட மின்மிகை மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு மின்சாரம் கொண்டு வருவதற்குப் போதுமான மின்தட வசதிகள் இல்லை. இதன் காரணமாக தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கி நஷ்டப்பட வேண்டியுள்ளது. மின்மிகை மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு மின்சாரத்தைக் கொண்டுவர தேவையான மின்தட வசதிகள் உருவாக்கப்பட வேண்டும். குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளின் காரணமாக குஜராத் மாநிலம் மின்மிகை மாநிலமாக உள்ளது. தமிழகத்தின் தேவைக்கு மின்சாரம் வழங்குவதாகவும் அறிவித்துள்ளார். தமிழக மின்வாரிய அதிகாரிகளைக் குஜராத் மாநிலத்திற்கு அனுப்பி பயிற்சி கொடுக்க வேண்டும். சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் மின்கட்டணத்தை உயர்த்தாமலேயே நிலைமையைச் சமாளிக்க முடியும். மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணத்தை உயர்த்துவது என்று முடிவு செய்துவிட்டு மக்கள் கருத்தைக் கேட்பது என்பது வேடிக்கையான ஒன்றாகும்.நுகர்வோருக்கான மின் கட்டணத்தை மூன்றடுக்கு முறையில் நிர்ணயிப்பதும், இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கணக்கெடுப்பதும் நுகர்வோருக்கு இழைக்கப்படும் அநீதியாகும். மாதம் ஒருமுறை கணக்கெடுத்து மின்கட்டணத்தை நிர்ணயம் செய்து வசூலிக்க வேண்டும். மின்நுகர்வோர்கள் எவரும் மின்வாரியத்திற்குக் கட்டவேண்டிய தொகையைச் செலுத்தாமல் இருந்தது இல்லை. நடைபெற்று இருக்கின்ற குளறுபடிகளுக்கு மின்வாரியமே பொறுப்பாகும். மின்வாரியத்தின் சுமையை மக்கள் மீது சுமத்துவது நியாயம் அல்ல.மின்வாரியத்தின் இயலாமை, மோசமான நிர்வாகம், ஊழல் நடவடிக்கைகள், சரியான திட்டமிடும் தன்மையின்மை ஆகியவையே இத்தகைய நெருக்கடி நிலைமைக்கு காரணம். தமிழகம் மின்சார விஷயத்தில் தற்பொழுது இருளில் மூழ்கத் துவங்கியுள்ளது. தமிழகத்தை ஒளிபொருந்திய மாநிலமாக மாற்றும் வல்லமை, நிர்வாகத் திறமை, முடிவெடுக்கும் துணிச்சல் ஆகியவை தமிழக முதல்வரிடம் நிறைய உள்ளன. பல சமயங்களில் இதை நிரூபித்தும் உள்ளார். வாக்களித்த மக்கள் மின்சார விவகாரத்தில் தமிழக முதல்வரிடம் நிறையவே எதிர்பார்க்கின்றனர்.
0 Responses So Far: